Nenjil Vandhu Senravai

Saturday, April 17, 2010

சக்தியிடம் புலம்பல்!!

இறைவியிடம் புலம்புவது ஒரு சுகானுபாவம்! அவள் உருவம் கண் முன் தெரிய அவள் பாதங்களை நம் கண்ணீரால் கழுவுதல் ஒரு மறுபிறப்பு! உயிரெழுதுக்களால் அவளுக்கு படைத்த இந்த புலம்பலின் சுகம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது!
-------------------------------------------------------------------------------------------------
அண்டமெல்லாம் அணைத்து நின்று
ஆனந்த நடனம் புரியும்
இறைவனுடல் சேர்ந்தவளே!
ஈன்றவளாம் இறைவியே!
உன் திருவருளுக்கு ஏங்கி
ஊண் உறக்கமற நினைந்துருகி
என் குறைகள் தவிர வேறேதும் தர இயலாமல்
ஏக்கமுற்று அழுகின்ற என் மேல்
ஐயமில்லாமல் உன் கருணைப் பார்வை
ஒரு சிறிதேனும் தந்து அருட்கூர்ந்தால் போதும்
ஓடி வந்து உன் காலடியில் வீழ்ந்து கிடக்க
மாட்டேனோ!! என் தாயே ஜகன்மாதா அகிலாண்டேஸ்வரி !!!!

யாரடி நீ கண்ணம்மா !!!

சாக்தம் சக்தியின் வழிபாடு!! சக்தியை நண்பனாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, இன்னும் பல வழிகளில் வழிபட்டோர் ஏராளம்! பாரதியின் கண்ணம்மா கேட்ட பாடலை கேட்டவுடன் எழுந்த எழுச்சியில் வந்த வரிகள்!!!
------------------------------------------------------------------------------------------------
ஏணிவைத்து உனை எட்ட முயன்றேன் கண்ணம்மா!
ஏணி சாற்ற சுவர் இல்லையே கண்ணம்மா!
வண்ணம் கலந்து உனை வரைய முயன்றேன் கண்ணம்மா!
வரைந்த உடன் கலைகிறாயே கண்ணம்மா!
தொட்டு தொட்டு உனை உணர முயன்றேன் கண்ணம்மா!
தொட தொட விலகுகிறாயே கண்ணம்மா!
வார்த்தைகளில் உனை வர்ணிக்க முயன்றேன் கண்ணம்மா!
எழுத்துகளில் ஒலி இல்லையே கண்ணம்மா!
சும்மா நான் இருக்க முயன்றேன் கண்ணம்மா!
மேலே விழுந்து விளையாடுகிறாய் கண்ணம்மா!
முயற்சி அனைத்தும் கைவிட்டேன் கண்ணம்மா!
என்னுடன் நீ இணைந்தாய் கண்ணம்மா!
உன்னுடன் நான் இருந்த காலமெல்லாம் கண்ணம்மா!
உயிருடன் நான் இல்லையடி கண்ணம்மா!

Labels: ,