Nenjil Vandhu Senravai

Tuesday, June 30, 2009

நட்பின் ஞாபகம்!

"Ghulam Ali" எனக்கு மிகவும் பிடித்த பாடகர். அவர் பாடிய "Chupke chupke raath dhin" என்ற பாடலை என் நண்பர் ஒருவரை மொழிபெயர்த்து தரச் சொன்னேன், எனக்கு ஹிந்தி மொழி தெரியாததால்!! அவர் கனிவு கூர்ந்து அப்பாடலை மொழிபெயர்த்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பினார்! பாடலை மட்டுமே அன்றுவரை கேட்டு வந்த எனக்கு இந்த மொழிபெயர்ப்பு ஒரு "கிளர்ச்சியை" உண்டு பண்ண, எழுந்த வரிகளே இவை! இவையும் எனது கற்பனையில் விளைந்த நிகழ்ச்சிகளே!
========================================================
என் விந்தை எண்ணங்களை
உன்னுடன் பகிர்ந்தபோது
உன் விரிந்த கண்கள்
என் ஞாபகத்தில் உள்ளது!!
என் சிந்தை வாட்டிய நினைவுகளை
உன்னிடம் சேர்த்தபோது
உன் பரிவு சொற்கள் என்னை தாலாட்டியது
இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது!!
பச்சை வயல் வரப்பில் மடையின் சகதியில்
பட்டுபோன்ற உன் பாதம் சிக்கியபோது
வயலெங்கும் பரவிய உன் சிரிப்பு
என் ஞாபகத்தில் இக்கணம் கூட உள்ளது!!
மௌனமாய் பல நிமிடம் இருந்து
இருவரும் வாய்திறந்து பல நேரங்களில்
ஒரே வார்த்தை பேசியது
என் ஞாபகத்தில் உள்ளது!!
என் கவிதையை முதன் முதலில் படித்துவிட்டு
உன் கண்களில் வழிந்த கண்ணீரை
எனக்கு ஈடில்லா பரிசாக அளித்தது
என் ஞாபகத்தில் பசுமரத்தாணியாய் உள்ளது!!
நான் நட்பிற்காக முகம் காணாமல்
உயிர் துறந்த புலவனல்ல
உன் முகம் பார்த்து உன்னுடன் இருந்த
பின்ன விநாடிகளை என் உள்ளத்தில் விதைத்தவன்.
என் உள்ளத்தில் விதைத்த
உன் பின்ன வினாடிகள்
ஆலமரமாய் பல விழுதுகள் தாங்கி
நம் நட்பை உரமாக்கி
நம் தூய எண்ணங்களை உயிராக்கி
நம் முதுமையிலும் வளரும்!!

Sunday, June 28, 2009

உண்மை நண்பன் !!!

எனக்கு கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு சில நண்பர்களில் இந்த நண்பர் எனக்கு மிகவும் பிடித்தவர். நல்ல குணம் படைத்தவர். அவரைப்பற்றி ஒரு நாள் நினைத்த பொழுது வந்த சில வரிகள் இவை!!
===============================================================

தினம் தினம் சுட்டெரிக்கும் இத்துன்ப உலகில்
அவர் ஆறுதல் பேச்சு குளிர் தென்றல் !!
மற்றவர் நிலையில் தான் நின்று செவிமடுத்து
விடை கொடுக்கும் வியக்க வைக்கும் அவர் திறமை!!
பலமுகம் காட்டும் பொய்யான இவ்வுலகில்
தன் நலம் கெட்டாலும் தன் துன்பம் மறைக்க மட்டும்
மறைமுகம் காட்டும் அவர் நேர்மை !!
பலர் வியக்கும் செயல் திறம்!! - அவரை என்
நண்பனாக அடைந்தது நான் செய்த பெருமை!!!

Labels:

உலகின் இயல்பு

இந்த வரிகளின் சரித்திரம் வருத்தம் அளிக்க கூடிய நிலையில் எழுதியது. என் நெருங்கிய நண்பர் ஒருவரை பற்றி அவதூறு மொழிகளை அவருக்கு தெரிந்தவரே சொன்ன பொழுது சீ !! என்ன உலகமடா இது என்று எண்ணிய பொழுது வந்த வரிகள்!!! இது மாதிரியான சம்பவங்கள் யார் வாழ்க்கையிலும் வந்ததே இல்லை என்று கூற முடியாது! இது மாதிரியான மனக்கலக்கங்கள் நிரம்பியது தான் இந்த வாழ்க்கை!!
===================================================================

நான் இந்த உலகை விட்டு நீங்க நினைக்கிறேன்;
தூய நெஞ்சங்களை தூக்கிலிடும்,
அழுகின்ற கண்களில் சுடுநீர் வார்க்கும்,
மென் இதழ் நினைவுகளை அலட்சியப்படுத்தும்,
வஞ்சிதவரை வாழவைக்கும்,
வாழவேண்டியவரை சிதையில் தள்ளும்,
பாதகம் செய்பவரை பரிசளித்து கௌரவிக்கும்,
இவ்வுலகை விட்ட பின்
எவ்வகையிலும் இன்பம் தான்.
நான் இவ்வுலகை விட்டு நீங்க நினைக்கிறேன்!!

Saturday, June 27, 2009

உன் பிரிவு

பகலில் தோன்றும் நட்சத்திரங்கள் என்று ஒருவர் எதற்கோ சொன்ன பொழுது இந்த கவிதை வரிகள் வந்து சென்றன. இது யாரையும் எவரையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்று தெரிவிக்க கடமை பட்டு உள்ளேன்!! :-)

காதலை சொல்லத்துடிக்கும் வார்த்தைகள் போல
என் விழியோரம் அரும்பி மறைந்தன கண்ணீர் துளிகள்!
மீண்டும் மீண்டும் கரை திரும்பும் கடலலைகள் போல
என் இதயக் கடலில் உன் எண்ண அலைகள்!
சூரியனைத் தேடும் இரவாய் உன்னைத் தேடும் நான்!
பகலில் தோன்றும் நட்சத்திரங்களாய் என் நினைவில் உன் முகம்!
உன்னை விட்டு விலகி இருக்கும் நேரம் எல்லாம்
துடிப்பதில்லை என் இதயம்!
உன்னுடன் நான் இருந்த காலமெல்லாம்
என் மனதினில் அதிமதுர இனிப்பு!
விரைந்து ஓடுகிறதாம் காலம் பிறருக்கு!
காலம் உறைந்துவிட்டது உன் பிரிவால் எனக்கு!

Monday, June 22, 2009

ஏன் இந்த தண்டனை?

விழிகள் கார்மேகம் மறைத்த
சூரியனைப் போல் மங்கியது கண்டேன்;
தாலாட்டு கேட்காமல் தூங்கும்
சிறு இதயங்களைக் கண்டேன்;
விழிகளில் ஏக்கம்; மனதினில் தனிமை;
யாரோ செய்த தவறுக்காக
இவர்களுக்கு ஏன் இந்த தண்டனை?
=====================================================
இந்த சில வரிகள் ராமகிருஷ்ண ஆத்மாலயம் என்ற "God's Children" காப்பகத்திற்கு முதன் முதல் சென்றபோது ஏற்பட்ட உணர்வுகளின் சொல்லாக்கம்.

Labels:

ஒரு முன்னுரை

நமக்குள் சில நேரங்களில் ஏதாவது எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். இந்த உணர்வு எல்லோருக்கும் எதாவது ஒரு சமயம் கட்டாயமாக வந்து இருக்க கூடும். அப்படி வந்த உணர்வுகள் எழுத்துக்களாய் மாறும் போது சில சமயம் நமக்கு நாமே பாராட்டுகளை தெரிவித்துக்கொள்ளும் அளவிற்கு அமைந்து விடும். நமக்கே புரியாத புதிராகவும் இருக்கும்.
அப்படி வந்த சில வரிகள் தான் இந்த தளத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன். நண்பர்கள் தவறுகள் இருந்தால் மன்னிப்பார்களாக! :-)

Labels: , ,